அனட்டோ சாகுபடி ( Annatto tree)

 அனட்டோ சாகுபடி ( Annatto tree):




லிப்ஸ்டிக் மரம் என்றழைக்கப் படும் அனட்டோ அண்மைக் காலமாக அதிக முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது . இது ஒரு சிறிய மரவகைத் தாவரம் ஆகும் . இந்தியாவில் கர்நாடகம் , ஆந்திரம் , ஒரிஸா , மஹாராஷ்டிரம் , மத்தியப் பிரதேசம் , தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இயற்கையாகவும் கணிச மான அளவில் சாகுபடி செய்யப்பட்டும் வருகிறது . 


பயன்கள்:


 இதன் விதையின் தோலில் அடர் சிவப்பு நிறச் சாயம் தரும் நிறமிகள் பிக்சின் , நார்பிக்சின் மற்றும் ஒரெல்லின் உள்ளது . இவைகள் ஒரு சிறந்த உணவுச் சாயமாக உணவுப் பொருட்களுக்கு நிறம் சேர்ப்பதற்காகப் பயன்படுகின்றது . பதப்படுத்தப்பட்ட பால் , பாலாடை , வெண்ணெய் , மீன் , சால்ட் , ஐஸ்கிரீம் மற்றும் அடுமனை உணவுப் பதார்த்தங்களில் நிறமூட்டுவதற்குப் பயன்படுகின்றது . அனட்டோ விதைகள் மற்றும் இலைகள் பல அரிய மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது . விதைகள் புற்று நோய்க்கு மருந்தாகவும் , இலைகளின் சாறு முடி உதிர்வதைத் தடுப்பதற்காகவும் பயன்படுகிறது . 


ஆண்டுதோறும் சுமார் 3000 டன் அனட்டோ விதைகள் நமது நாட்டின் உபயோகத்திற்கு மட்டும் தேவைப்படுகிறது . ஆந்திரம் , ஒரிஸா , மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள காடுகளிலிருந்துதான் இதுவரை சேகரிக்கப்பட்டு வந்தது . அதிகமான தேவை . குறைந்துவரும் இயற்கைக் காடுகளின் பரப்பு போன்ற காரணங்களால் அனட்டோ மருந்துப் பயிரை வணிக ரீதியாகச் சாகுபடி செய்ய ஆரம்பித்துள்ளனர் . அனட்டோ விதைகளிலிருந்து சாயம் எடுக்கும் தொழிற்சாலைகள் கேரளா , தமிழ்நாடு , ஆந்திரா , கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ளது . தமிழ்நாட்டில் மதுரை , திருநெல்வேலி , சேலம் மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது . 


மண் :


வளம் குறைந்த மண் வகைகளில் இதனைச் சாகுபடி செய்யலாம் . மண்ணில் காரத்தன்மை 7 முதல் 7.5 இருத்தல் அவசியம் . வடிகால் வசதியுடைய மண்வகை மிகவும் ஏற்றது . தட்ப வெப்பநிலை ஆண்டு தோறும் சீரான வெப்பம் ( 20 - 26 டிகிரி செல்ஷியஸ் ) உடைய பகுதிகளில் நன்றாக வளர்ந்து காய்க்கும் . வருடாந்திர மழையளவு 1000 முதல் 1200 மி.மீ இருப்பது அவசியம் . செடிகள் காய்க்கின்ற தருணத்தில் மழை இருத்தல் கூடாது . அத்துடன் காய்கள் முதிர்ச்சி பெறுகின்ற சமயத்தில் 30 முதல் 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் இருப்பது அவசியம் . 


பயிர்ப்பெருக்கம் :


அனட்டோவை விதை மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம் . ஒரு ஏக்கரில் நடவு செய்ய 400 செடிகள் தேவைப்படும் . பருவம் மற்றும் நடுதல் அனட்டோ விதைகளைச் சிறிய பாலித்தீன் பைகளில் டிசம்பர் , ஜனவரி மாதங்களில் விதைத்து ஆறு மாதங்களுக்கு நன்றாக பராமரிக்க வேண்டும் . பிறகு மே மாதத்தில் 10 அடி இடைவெளியில் இரண்டு அடி ஆழம் , நீளம் மற்றும் அகலமுள்ள குழிகளைத் தோண்டி ஒரு வாரம் ஆறப்போட்டு , பிறகு மேல்மண் , 5 கிலோ தொழு எரு மற்றும் மணலுடன் கலந்து குழிகளை மூடவேண்டும் . ஆறுமாத வயதுடைய செடிகளைக் குழிகளின் மையப்பகுதியில் நட்டு நீர்ப் பாய்ச்சவேண்டும் .


நீர்ப்பாசனம் :


செடிகளை நட்ட முதல் ஆறு மாதங்களுக்கு வாரம் ஒரு முறையும் பிறகு 10 நாட்கள் இடைவெளியிலும் நீர்ப் பாய்ச்ச வேண்டும் . காய்கள் முதிர்ச்சிபெறும் சமயத்தில் நீர்ப்பாசனத்தை நிறுத்திவிடவேண்டும் .


 பின்செய் நேர்த்தி:


 இது ஒரு நீண்டகாலப் பயிராகையால் ஆண்டுதோறும் மிகையாக வளரும் மரங்களின் உயரத்தைக் கவாத்து செய்து கட்டுப்படுத்த வேண்டும் . பொதுவாக மே மாதம் கவாத்து செய்வதற்கு உகந்த காலமாகும் . 


உரமிடுதல் :


ஆண்டுதோறும் செடிக்கு 10 கிலோ தொழு எரு , 50 கிராம் தழைச்சத்து , 100 கிராம் மணிச்சத்து மற்றும் 60 கிராம் சாம்பல் சத்து உரங்களை இட்டு நீர்ப் பாய்ச்ச வேண்டும் . அனட்டோ பயிரில் பூச்சி , நோய் தாக்குதல் அதிகம் கிடையாது .


 அறுவடை:


 அனட்டோ செடிகள் நட்ட 18 முதல் 24 மாதங்கள் கழித்துதான் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும் . ஆகஸ்டு , அக்டோபர் மாதங்களில் பூத்து ஜனவரி , பிப்ரவரி மாதங்களில் விதைகள் முதிர்ச்சி பெற்றுவிடும் . மூன்று அல்லது நான்கு சிறிய காய்களை உட்கொண்டிருக்கும் . ஒவ்வொரு சிறு காயிலும் 20 முதல் 60 செந்நிறமான விதைகள் இருக்கும் . இதனை 15 ஆண்டுகள் வரை லாபகரமாக சாகுபடி செய்யலாம் . மகசூல் ஒரு ஏக்கரில் 2000 கிலோ உலர்ந்த விதைகள் ஐந்தாம் ஆண்டு முதல் மகசூலாகக் கிடைக்கும் .

Reactions

Post a Comment

0 Comments